விநியோகஸ்தர்கள் கணிப்பு! புதிய சாதனையை நோக்கி ‘விஸ்வாசம்’

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வாசம்’ புதிய சாதனையை எட்டும் என்று அப்படத்தின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

கடும் போட்டிக்கு இடையே கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், இப்படத்தை தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டது. தற்போது இப்படத்தின் வசூல் விநியோகஸ்தர்களைப் பெரும் மகிழ்ச்சிடைய வைத்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் பி மற்றும் சி சென்டர்கள் என்று கூறப்படும் பகுதிகளில், இப்படத்தின் கதைக்களத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தின் விநியோகஸ்தர்கள் எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் மற்றும் சிலர் தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் இயக்குனர் சிவாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அஜித்குமார் நடித்த படங்களிலேயே ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். இப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு மட்டுமன்றி, குடும்பமாக பலரும் அதிகாலை காட்சிக்கு வந்ததாக கூறியுள்ளனர்.

இக்கூட்டத்தால் அஜித் நடிப்பில் வெளியான படங்களில், தமிழகத்தில் புதிய சாதனையை ‘விஸ்வாசம்’ எட்டும் என்று விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர். தமிழக அரசும் பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளதால், கண்டிப்பாக இது சாத்தியமாகும் என்று கருதப்படுகிறது.

Add Comment