ரசிகர்களால்தான் சொகுசு வாழ்க்கை..! நடிகர்களை சாடிய நடிகை

ரசிகர்களால்தான் சொகுசு வாழ்க்கை..! நடிகர்களை சாடிய நடிகை சென்னை: ரசிகர்களால் தான் நீங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறீர்கள், அதனால் கேரளா வெள்ளத்துக்கு அதிக நிதி வாரி வழங்க வேண்டும் என அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களை விமர்சனம் செய்துள்ளார்.

1960-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷீலா. பாசம், பணத்தோட்டம், இதய கமலம், சந்திரமுகி உள்பட பல படங்களில் நடித்தவர்.

இந்நிலையில், கேரளா வெள்ளத்துக்கு நடிகர்கள் நிதியளிப்பது தொடர்பாக ஷீலா கூறியதாவது:

“கேரளாவில் வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கின்றனர்.

ஆனால் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு குறைவான தொகையை வழங்கி உள்ளனர்.

முன்னணி மலையாள நடிகர்கள் பயன்படுத்தும் கார்களின் விலை ரூ.4 கோடி. ஆனால் அவர்கள் வழங்கிய தொகை சில லட்சங்கள் என்பது வேதனையாக இருக்கிறது.

கேரள அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்கின்றனர். அவர்களை ஒப்பிடும்போது நடிகர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்க வேண்டாமா?.

உங்களுக்கு பெயர் புகழ் பணம் எல்லாவற்றையும் கொடுத்தது ரசிகர்கள்தான். அவர்கள் கொடுத்த பணத்தில்தான் சொகுசாக வாழ்கிறீர்கள்.

இப்போது அந்த மக்கள் வீதியில் நிற்கும்போது நடிகர்கள் அதிக நிதி கொடுத்து உதவி செய்து அவர்கள் பக்கம் நிற்பதுதான் நியாயம். நட்சத்திர கலைவிழா நடத்தியும் நிதி திரட்டலாம்” என அவர் தெரிவித்தார்.

Add Comment