கத்தார் நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை!

கத்தார் நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது.

கத்தாரின் மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானி இன்று வெளியிட்ட ஆணையில், ஓர் ஆண்டுக்கு 100 வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின்படி, நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்கள், கத்தாரின் அனைத்து நலத்திட்டங்களையும் அனுபவிக்கலாம்.

குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, சுகாதார வசதி, சொத்து வாங்கும் உரிமை என அனைத்துக்குமே அவர்கள் தகுதிபெறுவார்கள். மேலும், நிரந்தர குடியுரிமை கோரும் வெளிநாட்டவர்கள், 20 ஆண்டுகள் கத்தாரில் குடியிருந்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் போதுமான வருமானம் பெற வேண்டும்.

கத்தாரில் உள்ள 2.7 மில்லியன் மக்கள்தொகையில் 90 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள்தான். எனவே, இந்த நிரந்தர குடியுரிமை வழங்கும் சட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு கத்தார் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் காரணமாக நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்த காரணத்தால் கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Add Comment