உங்களுக்கு தெரியுமா ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜெயலலிதா கேட்ட பாடல்

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு வந்து, ‘கண்ணாளனே’ பாடலை ஜெயலலிதா கேட்டதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், இம்மாதம் 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. வைரமுத்து பாடல்கள் எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானிடம், ‘உங்களுடைய மூவர் கூட்டணியில் உருவான பாடல்களில், உங்களுக்குப் பிடித்த பாடல் எது?’ என்று கேட்கப்பட்டது.

தனக்குப் பிடித்த பாடலாக ‘பம்பாய்’ படத்தில் வரும் ‘கண்ணாளனே…’ பாடலைக் குறிப்பிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அப்போது பேசிய வைரமுத்து, “கண்ணாளனே பற்றி ஒரு கூடுதல் தகவல். அந்தப் பாடலை எழுதும்போது எல்லா வரிகளும் ஓகே எனச் சொல்லிவிட்டார் மணிரத்னம். ஆனால், முதல் வரி மட்டும் சரியாக அமையவில்லை. ‘தன்னானனா…’வுக்கு மட்டும் வார்த்தைகள் சிக்கவில்லை. என் ஜீவனே, என் நாதனே, என் அன்பனே, என் நண்பனே என நானும் ஏதேதோ சொல்லிப் பார்க்கிறேன். என்னவோ சரியாக அமையவில்லை.

அந்த ஒரு வார்த்தைக்காக இரண்டு மணி நேரம் தாமதமாகிக் கொண்டிருந்தது. கடைசியாக, ‘மிகப்பழைய வீடு தரட்டுமா?’ என்று சொல்லி, ‘கண்ணாளனே’ என்றேன். ‘இதைத்தான் கேட்டேன்’ என்றார் மணிரத்னம்.

இதைப்பற்றி இன்னொரு தகவலும் உண்டு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு வந்து, ‘லேட்டஸ்ட்டாக ரெக்கார்ட் பண்ண ஒரு பாட்டை போட்டுக் காட்ட முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது அவர் கேட்ட பாடல் கண்ணாளனே” என்றார்.

Add Comment